இணைய விண்மீன் மு. இளங்கோவனார்

அன்பு நண்பர் முனைவர் மு. இளங்கோவன் கல்லூரியில் தமிழ் பயிற்றும் பேராசிரியர்களில் இணைய உலகின் விண்மீனாக விளங்கி வருகிறார். நிறையப் புதிய செய்திகளையும், தமிழ்ப்பணி புரிபவர்களையும் அறிமுகப்படுத்திப் படங்களுடன் விரிவாக அவரது பதிவில் எழுதி வருகிறார். இவ்வாரம் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக தமிழ்கூறும் வலையுலகை உலாவருகிறார். வாழ்த்துக்கள்!

மு. இளங்கோவின் பதிவுகளைப் படிக்கும்போது என் நினைவுக்கு வருபவர் குன்றக்குடி பெரியபெருமாள் அவர்கள். தான் எழுதும் சான்றோரை நன்கு அறிந்து, அவர் படைப்புகளை வாசித்து எழுதியவர் குன்றக்குடி பெரியபெருமாள் (பி. 1933) ஆவார். அவரது புத்தகங்களை நண். இளங்கோ வாசித்துப் பார்த்தல் வேண்டும். குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், காமதேனு பப்ளிகேசன்ஸ், சென்னை, 1996. என் நண்பர்(சிகாகோ) இந்நூல் வெளிவரப் பாடுபட்டார்.

இன்னொன்று: நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், எழுத்துச் செம்மல் குன்றக்குடி பெரியபெருமாள், பதிப்பாளர்: மதி நிலையம்.

கவிஞர் அறிவுமதியின் நண்பர், இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரத்திடம் பணிகற்றவர். தன் ஆற்றுப்படை நூல்களுடன், பனசைக் குயில் கூவுகிறது, திருத்தமான பாரதிதாசன் கவிதைகள், பொன்னி இதழ்க் கவிதைகள், பஞ்சமரபு, ... அத்தனையும் இணைய உலகில் ஏற்ற அவருக்கு பதிவுலகர்கள் உதவ முன்வரவேண்டும், அது கடமை. பத்திரிகை உலகின் எழுத்துச் செம்மல் குன்றக்குடி. இணையத்தின் எழுத்துச் செம்மல் என மு. இளங்கோவன் திகழ்ந்து தமிழ் உலகம் அறியவேண்டும்! கணிதமிழை, வலைநுட்பை ஆயிரமாயிரம் ஆசிரியர்களுக்குத் தமிழ்நாட்டில் எடுத்துச் செல்லும் பெரும் பணியில் உழைக்கும் செம்மல் மு. இளங்கோ வளம்பல பெற்று வாழ்க!


மறைந்த குன்றக்குடி பெரியபெருமாள் பற்றி உரைத்தேன் அல்லவா? அவர் எழுத்தின்
சில உதாரணங்களைக் காண்போம்.

(1) சி. வை. தாமோதரம் பிள்ளை
(2) சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை
(3) சுவாமி விபுலாநந்தர்
(4) சுப்பிரமணியன் 'பாரதி'யானது எப்படி?

எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக் கொள்வர். அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.

நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக் கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களிப் புலவரிடம் வழங்கினர். கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களைப் புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர். சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரியபெருமாள்

-------

உவேசா அவர்களின் ஆசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்று (பெரியபெருமாள், த. வ. ந. நூல்)

"சீர்காழியில் நீதிபதியாக வீற்றிருந்த வேதநாயகர் மகாவித்துவான் அவர்களைச் சீர்காழிப் பதியின் மீது ஒரு கோவை நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்று மகாவித்துவான் அவர்கள் தண்தமிழ்ச் சீகாழிக்கோவை நூல் ஒன்றை எழுதி சீர்காழிச் சிவன் கோவிலில் அரங்கேற்றினார். அரங்கேற்றத்துக்குத் தலைமை ஏற்ற வேதநாயகர் நீதிபதிக்கே உரிய தோரணையில், திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசனைச் சாட்சிக் கூண்டில் ஏற்றி, 'சத்தியமாகச் சொல்கிறேன்... நான் கூறுவது உண்மையைத் தவிர வேறில்லை' எனக் கூற வைப்பது போல ஒரு பாடலைச் சொல்லி, கோவையைப் பற்றிக் கருத்துக் கேட்டார்.

விதி எதிரில் அரி முதலோர் புகல் புகலி ஈசரே! விண்ணோர் மண்ணோர்
துதிபொதி பல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சிசுந்தரப் பேர்
மதிமுதியன் கோவையைப்போல் பெற்றீர்கொல்? இக்காழி வைப்பின் நீதி
அதிபதி நாம் என அறிவீர்! நம் முன்னம் சத்தியமா அறைகுவீரே!

அரங்கேற்றம் நிறைவு பெற்ற அக்கணமே, அறம் கூறும் திருவாயினின்றும் வெளிப்பட்ட பாடல் இது.

சீகாழிப் பதியின் ஈசனே! உம்மை மண்ணில் வாழும் மனிதர்களும் விண்ணில் இருக்கும் தேவர்களும் பல பாமாலைகள் சூட்டிப் புகழ்ந்திருப்பர். எங்கள் மீனாட்சி சுந்தரனின் இப் பாமாலை பற்றிய உமது கருத்தைச் சத்திய வாக்காக உரைப்பீர்! இதனை நீதிபதி என்ற முறையில் உம்மை நான் கேட்கின்றேன்" என்ற பொருளில் அமைந்திருந்த இந்தப் பாடலைக் கூடி இருந்தோர் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்."

அன்புடன்,
நா. கணேசன்

விதி எதிரில் அரி முதலோர் புகல் புகலி ஈசரே!

(1) விதி = நீதிபதி.

திருமால் முதலானவர்கள்புகலிடமாகக் கொள்ளும் சிவனே! நீதிபதி முன் நிற்பவரே!

(2) விதி = பிரமன்,

பிரமன், ஒப்பற்ற ஹரி இருவரும் அடிமுடி தேடிக் காணாது புகலடையும் சிவனே!

இருவிதத்திலும் பொருள்படும் நயம் காண்க.

1 comments:

Thamizhan said...

இன்று தமிழுக்காக உண்மையில் உழைப்போர் பாராட்டப் படுவதில்லை.
ஆனால் உண்மையாக உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே தான் உள்ளனர்.

பேராசிரியர் மு.இள்ங்கோவன் அவர்களின் ஆதாரபூர்வமான் ,தேவையான,மற்றவர் செய்யாத செயல்கள் தமிழுக்கும்,தமிழினத்திற்கும் ஆற்றப் படும் அருந்தொண்டு.

வாழ்க பல்லாண்டு!