உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (கோவை, ஜூன் 2010)

உலகத் தமிழ் மாநாடு - உலகத் தமிழராய்ச்சி நிறுவன ஒப்புதலைப் பெற அரசு முடிவு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 11:29

சென்னை: அடுத்தாண்டு [ஜூன்] மாதம் கோவையில் நடைபெறவுள்ள 9வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக விரைவில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நொபுரு கரசிமாவை தொடர்பு கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செயலதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உரிய ஒப்புதலைப் பெற நிறுவனத்தின் துணைத் தலைவரான வி.சி.குழந்தைசாமி ஏற்பாடு செய்வார்.

இதுதொடர்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு முறைப்படி முதல்வர் கருணாநிதியும் கடிதம் எழுதுள்ளார்.

மேலும், உலகத் தமிழ் மாநாடு தொடர்பான தகவல்கள் அடங்கிய இணையதளமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தி்ல் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் இணைய பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் குழந்தைசாமி, முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், உலகத் தமிழராய்ச்சி நிறுவன பொருளாளர் முத்துக்குமாரசாமி, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0922-govt-to-seek-approval-from-iatr-for-world.html
------------------
உலகத் தமிழ் மாநாடு ஜுன் இறுதிக்கு ஒத்திவைப்பு
தினமணி 29 செப். 2009

சென்னை, செப்.29: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரம்:

நிதி அமைச்சர் அன்பழகன்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைமைச்செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி
முனைவர் வா.செ.குழந்தைசாமி
முனைவர் மா.ராசேந்திரன்

ஐம்பெருங்குழு உறுப்பினர்கள்

முனைவர் ஒளவை நடராசன்
மணவை முஸ்தபா
கவியரசு வைரமுத்து
பேராசிரியர் ராசராசேசுவரி
கவிஞர் கனிமொழி எம்பி

எண்பேராய உறுப்பினர்கள்

முனைவர் மா.நன்னன்
கவிக்கோ அப்துல்ரகுமான்
முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
கவிவேந்தர் வேழவேந்தன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா
து.ரவிக்குமார் எம்எல்ஏ

சிறப்பு அழைப்பாளர்கள்

முனைவர் பொன்.கோதண்டராமன்
முனைவர் அறவாணன்
ஐராவதம் மகாதேவன்
இரா.முத்துக்குமாரசாமி}பொருளாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
முனைவர் சுப்பராயலு} ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்


-----------------

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=8c07b7c0-bacd-4e15-b398-aca05e7bae44&CATEGORYNAME=TCHN

9ஆம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள்
சென்னை, செப்.18 (டிஎன்எஸ்)

சென்னை தலைமைச் செயலகத்தில் செப்.17, 18 தேதிகளில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரையில் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்துப் பேசியதாவது:

"இந்த மாநாட்டில் பெரும் சிறப்பாக, நாம் உலகத் தமிழ் மாநாட்டைத் தமிழகத்தில் - கோவை மாநகரில் - ஜனவரி-பிப்ரவரித் திங்களில் நடத்துவது என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். எது மறந்தாலும், உலகத் தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை உருவாக்கிய கூட்டம் இந்த மாவட்ட ஆட்சியர்களுடைய கூட்டம் என்ற அந்த வரலாறு நிலைத்து நிற்கும். (கைதட்டல்) எனவே, இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும், அரசு அதிகாரிகளும் 'ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுத் தீர்மானம் நான் கலந்து கொண்ட கூட்டத்திலேதான் நிறைவேற்றப்பட்டது' - என்று ஆயுள் பூராவும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளை நாம் விரைவில் அறிவிக்க இருக்கின்ற பல்வேறு குழுக்கள், குழுக்களின் உறுப்பினர்கள், அந்தக் குழுக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்கள், யார் யாரோடு தொடர்பு கொள்ள வேண்டுமோ, அவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டு வகுத்து வழங்க இருக்கின்றார்கள், அறிவிக்க இருக்கின்றார்கள்.

நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். உலகத் தமிழ் மாநாடு என்பது ஏதோ பெரிய ஊர்வலங்கள் நடத்தி, பொதுக்கூட்டங்கள் நடத்தி, கலை விழாக்கள் நடத்தி, கலைந்து போகின்ற ஒன்றாக இல்லாமல் - அறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய உலகத் தமிழ் மாநாடு, சென்னை மாநகரத்தில் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு அரங்கங்களில், பல்வேறு புலவர் பெருமக்களை, அறிஞர் பெருமக்களை, கவிஞர்களை, பண்டிதர்களை, இவர்களையெல்லாம் அழைத்து, அவர்களை விவாதிக்கச் செய்து, அந்த விவாதத்திலே விளைந்த முத்துக்களைப் பொறுக்கியெடுத்து, அவைகளையெல்லாம் கோர்த்து, மணியாரமாக ஆக்கி, உலகத்திற்கு - உலகத்திலே தமிழர்கள் எங்கெங்கே வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வழங்கிய மாநாடாக அந்த மாநாடு விளங்கியது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதிலே எள்ளளவும் குறையாமல், நாம் நடத்துகின்ற இந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் ஆராய்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், ஏற்கனவே நாம் இந்த உலகத்திலே தனித்து நின்று ஒரு மொழியை வளர்த்தோம் என்ற நாம் கட்டிக் காத்த பெருமைக்கும் சிறிதளவும் மாறுபாடு ஏற்படாமல் நடந்தே தீரவேண்டும் என்ற உறுதியோடு இந்த மாநாட்டை நாம் நடத்த வேண்டும்.

அது மாத்திரமல்ல - இந்த மாநாட்டிலே நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், எடுக்கின்ற முடிவுகள் எதிர்காலத்திலே - நான் அதிகம் ஆசைப்படுவதாக யாரும் கருதக்கூடாது. நீங்கள் எல்லாம் துணையாக இருக்கிற நேரத்தில் ஆசைப்படுவதில் தவறுமில்லை. அகில இந்திய அளவிலே மத்திய ஆட்சி மொழியாக நம்முடைய தமிழ் இடம்பெற வேண்டும் என்கின்ற அளவிற்கு அரசியல் ரீதியாக அல்ல - நாம் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகின்ற நம்முடைய உணர்வு ரீதியாக அந்த முடிவை நாம் எய்துவதற்கு அந்த மாநாடு 'ஒல்லும் வகையெல்லாம்' நமக்குப் பயன்படுகின்ற அளவிலே நம்முடைய முயற்சிகள் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு, குறிப்பாக, தலைமைச் செயலகத்திலிருந்து மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க ஒரு தனி அதிகாரி நியமனம் செய்யப்படலாமா? கோவை மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிலையிலே ஒருவர் நியமனம் செய்யப்படலாமா? கோவை நகரில் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகள் இவைகளையெல்லாம் எப்படிச் செய்வது, ஆகிய இத்தனை யோசனைகளையும் வடிவமைக்க இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நிறைவுற்றவுடன், அடுத்தடுத்து அதற்கான பணிகளை நம்முடைய தலைமைச் செயலாளர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் எடுத்து நடத்திட நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

0 comments: