இளம்பூரணர் வரலாறு என்னும் போலிப் பாயிரம் (20-ஆம் நூற்றாண்டில் உருவானது!)

தொல்காப்பிய உரைகளில் மிகச் சிறந்த உரை இளம்பூரண அடிகள் இயற்றியது. தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் கிடைத்துள்ளது. தொல்காப்பியத்துக்கு எழுந்த முதல் உரை இளம்பூரணம். தமிழ்நாடு என்று முதலில் அழைத்தவர் இளம்பூரணவடிகளே: செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு, ’நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ என்பதை உதாரணங் காட்டுகின்றார் (சொல்-13). ’கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்று அத்துச் சாரியைக்கு உதாரணம் கூறுகிறார். உழவு என்றால் கொங்குநாட்டிலேயும், வணிகம் என்றால் கடல்கடந்து கப்பலால் செய்வதும் ஆகும் என்பது சிறப்பல்லவா?

அவரது எழுத்தால் அவர் சமணத் துறவி என்பர் தமிழறிஞர். ”உரையாசிரியர் துறவுபூண்ட பெரியோரென்பது அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திலே “உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள்” எனக் கூறுவதாலும் “அடிகளென்றது துறத்தலான்” என அவரே அடிகள் என்ற சொற்குப் பொருள் உரைத்தமையாலும் தெளிவாகின்றது. இனி, நன்னூலியற்றிய பவணந்தி முனிவர், தம் சூத்திரங்கள் சிலவற்றை, இளம்பூரணவடிகள் உரைக்கருத்தைத் தழுவியே இயற்றிப் போந்தமையால், பவணந்தியாருக்கு முந்தியவர் உரையாசிரியர் என்று ஊகிக்க இடம் இருக்கிறது.” (அபிதான சிந்தாமணி, பக். 220).

“ஒல்காப் புலமை தொல்காப் பியத்துள்
உளங்கூர் கேள்வி இளம்பூர ணர்எனும்
ஏதமில் மாதவர் ஓதிய உரை”
என்று சமணராகிய மயிலைநாதர் போற்றுகிறார்.

pg. 29, Tamil love poetry and poetics, Takanobu Takahashi
"iLampuRaNar was probably a Jaina scholar, living in the 12th Century AD. He wrote his commentary, the oldest extant, on the whole text of Tol., and it has fortunately come down to us intact. His style is simple, clear and lucid."

K. Zvelebil, The Smile of Murugan on Tamil literature of South India, 1973, pg. 134 "ILampUraNar. The first, and probably the best commentary is that of iLampUraNar. He fully deserves the title of uraiyaaciriyar, i.e. "The Commentator". His commentary has fortunately reached us in full. He was probably a Jaina scholar, living in the 11th or 12th century.

Ilampuranar's commentary shows a great deal of common sense and critical acumen. He obviously distrusted the tales connecting the mythical Akattiyar (Agastya) and the author of Tolkappiyam."

னகர ஈற்று விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை!

தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.

னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது
(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)

ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.

-----


” சமணமுனிவர் ஒழுக்கம்

5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர்.

அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள்: 461)

என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப்பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவாவறுத்தல் வேண்டும்.” (அத். 4, மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்).


இதனை மாற்றச் சொர்ணம் பிள்ளை என்பவர் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு போலிப் பாயிரத்தை எழுதினார். இதனைப் போலிச்செய்யுள் என்று அடையாளம் கண்டு எழுதியவர்கள் மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை), மு. வை. அரவிந்தன், போன்றோர் ஆவர். சொர்ணம்பிள்ளை இன்னிலை, செங்கோன் தரச்செலவு (சங்க நூலாம்!) போன்ற போலி நூல்களையும் இயற்றி ஆராய்ச்சி உலகைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.

போலிப்பாயிரத்தால் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் ஏமாந்துவிட்டார். அவர் செந்தமிழ் இதழ் 42-ல் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவர் தான் இளம்பூரண அடிகள் என்று நிறுவ முயற்சித்தார். இதனை அடியொட்டி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட முன்னுரை. இம்மாதிரி போலி நூல்கள் 20-ஆம் நூற்றாண்டில் எழக் காரணமாயிருந்த தமிழ்ச் சைவப் பின்புலத்தை பொ. வேல்சாமி (காலச்சுவடு, ஆகஸ்ட் 2006) எழுதிய கட்டுரையில் பேசுகிறார்.


தொல்காப்பியம் - இளம்பூரணம்

செல்லூர்க்கிழார் பதிப்பு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

தொல்காப்பிய உரை எழுந்த வரலாறு

இவ்வெல்லாச் சிறப்பும் ஒருங்கே வாய்ந்த அரிய பெரிய இந்நூலுக்குப் பல நூற்றாண்டுகள்வரை உரையெழுதப் பெறவில்லை. ஆசிரியர்கள் வழிவழியாகத் தத்தம்மாணவர்கட்குத் தாம் தாமே உணர்ந்த அளவுக்கு உரையமைத்துப் பாடஞ்சொல்லி வருவாராயினர். இவ்வாறு தொன்றுதொட்ட மரபு மரபாக உரை சொல்லப் போந்தவர்கள், நாளாக நாளாகத் தற்காலம்போல், தத்தமக்குத் தோன்றியவாறே தம் கருத்துக்கேற்பத் திரித்துப் பொருள் கூறி வருவாராயினர், அதனால், நாட்டில் பல்வேறு திறப்பட்ட கருத்துடை ஆசிரியர் பல்கி, யானைகண்ட குருடர்போலத் தாம் தாம் சொல்வதே உண்மை யுரையென வீணுரை பகர்வாராயினர். இங்ஙனமே சில நூற்றாண்டுக் காலங்கள் கழிவவாயின. இக்காலத்தே, தமிழ்நாடு செய்த நல்லூழ்வகையால் இளம்பூரணவடிகள் தோன்றினார். இவர் தமிழ்மொழியை முற்றக்கற்ற முழுதுணர் பெரியராய் இலகி, தொல்காப்பிய நூற்பெருங் கடலுட் புக்குத் தம் நுண்மாண் நுழைபுல மாட்சியால் நுணுகி ஆய்ந்து தௌ்ளத் தெளிந்த பேருரை வகுப்பாராயினார், இவருரை மூன்றதிகாரங்கட்கும் முற்ற முடியவுள்ளது, இவர் முதல்முதல் இதற்கு உரையெழுதிய பெருமைச் சிறப்புக்கொண்டு இவரை இடுகுறிப்பெயராற் கூறாது, உரையாசிரியர் என்னும் சிறப்புப் பெயரால் வழங்குவாராயினர். இவர்தம் உரைச் சிறப்புக்கு இப்பெயரொன்றே சான்று நின்று பகரும்.

இவரின் பின்னர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர், நுணுகி ஆழ்ந்து விரிந்த தம் மதிநுட்பங்கொண்டு சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஒரு நல்லுரை வரைந்தளித்தனர். பேராசிரியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ளனர். உற்று ஆய்ந்தால் இவர் தொல்காப்பியம் முழுதுக்கும் உரை கண்டனரெனத் தெரிகின்றது. ஆனால், முழுதும் இதுகாறும் கிட்டிற்றில்லை.

நச்சினார்க்கினியர்

எழுத்தததிகாரம் சொல்லதிகாரங்கட்கும் பொருளதிகார அகத்திணையியல் முதலாகப் பொருளியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரை வகுத்துள்ளனர்.ஏனைய பகுதிகட்கு எழுதவில்லையென்றே தோன்றுகிறது; கல்லாடர் சொல்லதிகாரச் சில பகுதிகட்கு மட்டுமே உரை வரைந்துள்ளனர்.அவர் உரையில் சில பகுதிகளன்றி முழுதும் வெளிவந்திலது; தெய்வச்சிலையாருரை, சொல்லதிகாரத்துக்கு மட்டுமே இன்றுகாறும் வெளிவந்துள்ளது. எனவே, இன்ன இன்ன பகுதிகட்கு இன்னின்னார் இவ்விதுவரை உரைகண்டாரென்று அறுதி கொண்டுரைத்தற்கு அகப்புறச் சான்றுகள் ஒன்றுமில்லை.'வந்தது கொண்டு வாராதது உணர்தல்' , என்பது கொண்டு அவையிவற்றை ஆய்வாளர் முடிபு காண்பாராக.

இளம்பூரணர் உரைச்சிறப்பு

எது எவ்வகையாயினும் தொல்காப்பியம் முழுதிற்கும் முற்ற முடியக் கிடைத்திருக்கும் உரை இவ்விளம்பூரணம் ஒன்றேயாகும்.இவ்வுரை ஏனைய உரைகளினும் கருத்து விளக்கமும் தெளிவும் மிக்கது. இதன் சிறப்பை நச்சினார்க்கினியத்தையும் பேராசிரியத்தையும் ஒருங்கே ஒப்ப வைத்துக் கொண்டு பயில்வார் தெற்றென உணர்வர். இவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒண்மையுடையார்; விரிக்க வேண்டுமிடத்து மிகைபடக் கூறாது வேண்டியாங்கு விரித்தும், சுருக்க வேண்டுமிடத்து மிகச் சுருக்காது கருத்து விளக்கம் பெறச் சுருக்கியும் கூறும் மதிநலம் மிக்குடையார். எடுத்துக்காட்டாக அகத்திணையியலில் அகம் இன்னதென்பதை விளக்கிச் சொல்லுங்கால் ,'அகப்பொருளாவது போகநுகர்ச்சியாக லான் அதனான் ஆயபயன் தானே அறிதலின், அகம் என்றார்' என்று விளக்கியும், புறம் அன்னதென்பதை விளக்கிக் கூறுங்கால், புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலும் ஆகலான் , அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் . அஃதற்றாக அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும்' என்று விளக்கி விரித்துரைத்தும் தெளித்தலால் நன்கு அறியலாம். இன்னும் இவர்தம் உரை ஆங்காங்கே பருந்தும் நிழலும்போல் நூற்பாக்களின் நுணுகிய கருத்துக்களை உண்மை பிறழாது விளக்கி யாவரும் எளிதிற் கற்றுணருமாறு திறம்பட வகுத்துரைத்திருப்பதைப் பயில்வார்கள் நன்கறியலாம். இத்தகைய உரைவளமிக்க இவ் விளம்பூரணத்தின் கருத்துக்களைத் தழுவியும் வேறுபட்டும் இயைந்துள்ள நச்சினார்க்கினியருரையையும், பேராசிரியருரையையும் ஆங்காங்கே வேண்டுமிடத்து அடிக்குறிப்பாக அமைத்துக் காட்டப்பெற்றுள்ளது. அதனால் இவ்வுரை நயத்தோடு அவ்வுரையையும் ஒப்ப நோக்கி உண்மை தெளிய விரும்பும் ஆராய்ச்சியாளருக்கும் கற்றுத்துறைபோக விரும்பும் மாணவர்கட்கும் பெரும்பயனாக அமையும்.

இளம்பூரணார் வாழ்க்கை வரலாறு

இவ்வளவு அரிய கருத்து நயமிக்க பேருரை வகுத்துத் தந்த உரையாசிரியர் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய விரும்புவது யாவர்க்கும் இயல்பேயாகும்.ஆனால், அவர்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தெற்றென அறிதற்குரிய அகச் சான்றுகள் இல்லை, ஆயினும் ஆங்காங்கே கண்டு கேட்ட வுரை கொண்டே அறிய வேண்டுவதாகவுளது. அவற்றுள் ஒன்றிரண்டு சான்றுக்காகக் காட்டியுரைப்பாம்.

இவர் வாழ்ந்த இடம் பாண்டி நாட்டில் கீழ்க் கடற்கரைப் பகுதியிலுள்ள செல்லூரென்றும் மறையில் வல்ல இளம்போதி என்பாரின் புதல்வரென்றும் , அந்தணர் வகுப்பினரென்றும் கூறுவர்.

இவர் வரலாற்றைக் குறித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆசிரியரான திரு. டி. வி. பண்டாரத்தாரவர்கள் செந்தமிழ்த் தொகுதி 42 ல் பகுதி 10 முதல் 12 வரையுள்ள இதழ்களில் ஒரு கட்டுரை வரைந்துள்ளனர். அதன் ஒரு பகுதி வருமாறு:

-------------------------
-------------------------
-------------------------
பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
தோய மடுத்தோர் தொல்காப் பியனுரை
முத்திற ஒத்தினுக் கொத்தசீர்க் காண்டிகை
சொன்னிலை மேற்கொள் தொகுபொருள் துணிபுடன்
இயல்நூற் பாமுடி பிணைத்தடி காட்டித்
தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே
கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்
தன்னறி அளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன்
குண கடற் செல்லூர் மணக்குடி புரியான்
தண்முலை முகையென வெண்ணூல் சூடி
அந்தணன் துறவோன் அருமறை உணர்ந்த
இளம்போதி பயந்த புனிதன்
இளம்பூ ரணனுரை இனிதுவாழ் கீங்கென்'

என்னும் பாட்டினால் இவர் கொங்குவேள் மாக்கதையாகிய உதயணன் காதைக்குக் குறிப்புரை யெழுதியுள்ளன ரென்றும், திருக்குறளுக்கும் உரையெழுதின ரென்றும் தெரிகின்றது. ஆனால், திருக்குறளுக்கு உரை வகுத்தவர்களைக் குறிக்கும்.

'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமேல் அழகர் பருதி- திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்'

என்னும் பழைய வெண்பாவொன்றினால் பதின்மர் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள் என்று கூறப்பெற்றுள்ளது. ஆனால், இதில் இளம்பூரணர் ஒருவராகப் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆயினும், செல்லூர் மணக்குடி புரியான்' என மேற்காட்டிய பாட்டின்கண் வரும் மணக்குடி என்பதே மருவு மொழியாகி மணக்குடவர் ஆனதென்று கொள்ளற்கு இடனுண்டு. குடி, குடம் ஆக மாறிவருதல் வழக்கில் இயல்பாக இருக்கின்றது. குடிக்கூலி குடக்கூலியாகத் திரிந்ததுபோல, மணக்குடியார் மணக்குடவர் ஆயினார் போலும்! இவற்றைத் தவிர வேறு இவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்கு தெற்றென அறியக் கிட்டவில்லை. வழங்கும் கதைகளும் உண்மையென்று கோடற்கமையாது.

இளம்பூரணர் வரலாற்றில் சில வேறுபாடுகள்

'அந்தணன் துறவோன்......... இளம்போதி பயந்த புனிதன் இளம்பூரணன்' என்னும் பாடலடிகளினால் இவர் மறையவர் குலத்தாரென்றும், இளம்போதி மகனாரென்றும் குறிப்பிடப்படுகின்றது. நம் தமிழ்நாட்டில் வேறுபட்ட இருவேறு கருத்துக்கள் இடைக்காலத்தில் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் மறையவர் குலத்தானாகவே இருத்தல் கூடுமென்பது; மற்றொன்று தமிழில் நூல் செய்தால் அது, வடமொழியிலிருந்து மொழிபெயர்த்ததாகக் கூறவேண்டுமென்பது. இம்மருட்சிக் கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டே வள்ளுவர், ஒளவையார் போன்ற பெரியார் வரலாறெல்லாம் புனைந்துரைக்கப்பட்டன. அவற்றுக்கு என்ன உண்மைச் சான்றுண்டு? இதைப் போன்றே இவர் வரலாறு பற்றிய கதைகளும் புனைந்துரையென்றே கோடல் பொருந்துவதாகும். தொல்காப்பியருக்குத் திரணதூமாக்கினி யென்று புனைபெயர் சூட்டி ஆரியராக்கிய இக் கட்டுக் கதையாளர் வேறென்னதான் கூறார்? எனவே, இப் புனைந்துரைகளை உண்மையென நம்பாது தமிழுக்கு உரையெழுதி வளம்படுத்திய பெரியார்களுள் இவரும் ஒருவர் எனக் கொள்ளுதலே தக்கது.

செல்லூர்க்கிழார்,
செ.ரெ. இராமசாமி பிள்ளை,
கழகப்புலவர்.”


இளம்பூரணர் பற்றி அண்மைக்காலத்தில் எழுந்த இந்தப் போலிப் பாயிரம் பற்றி விரிவாக மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள் (பக். 191-193) தரும் ஆய்வுச் செய்தி தருகிறேன்:


போலிப் பாயிரம்

இளம்பூரணரைப் பற்றி, சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று, செந்தமிழ் என்னும் இதழில் (தொகுதி 20, பக்கம் 503) வெளிவந்துள்ளது:

தண்கடல் அசைவளி உறுப்பத் திரைபிதிர்ந்
தூங்கலின் பொருட்குவைப் புணரியில் ஐயுற
அலைவமன் மயரினை அகற்றல் எழுத்தால்
திணைதுறை உட்கோள் இயற்றினன், அறிய
கவர்பொருள் மாக்கள் மயக்கினுக்கு இரங்கிப்
பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
தோய மடுத்தோர் தொல்காப்பியன் உரை
முத்திற ஓத்தினுக்கு ஒத்தசீர்க் காண்டிகை
சொல்நிலை மேற்கோள் தொகுபொருள் துணிவுடன்
இயல்நூற் பாமுடிபு இணைத்து அடிகாட்டி,
தலைகடை கூட்டித் தந்தனன்; பண்டே
கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்;
தன்னறிவு அளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பால் மதிப்பிடப் பொறித்தோன்:
குணகடல் செல்லூர் மணக்குடி புரியான்
தண்முலை முகைஎன வெண்ணூல் சூடி
அந்தணன் அறவோன் அருமறை உணர்ந்த
இளம்போதி பயந்த புனிதன்
இளம்பூரணன் உரை இனிது வாழ்க ஈங்கென்


இப் பாயிரத்திலிருந்து இளம்பூரணர் வரலாற்றினைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்; இளம்பூரணர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை யோரமாய் உள்ள செல்லூரில் பிறந்தவர்; மணக்குடி புரியான் என்பது அவரது குடிப்பெயர்; அவர் தந்தையார் அந்தணர், அறவோர், அருமறை உணர்ந்தவர், இளம்போதி என்பவர். இளம் பூரணர் தொல்காப்பியம், கொங்குவேள் மாக்கதை, திருக்குறள் ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றியவர்.

மேலே காட்டப்பட்ட செய்யுள், பிற்காலத்தில் ஒருவர் (சொர்ணம் பிள்ளை)[*] எழுதிவிட்ட போலிச் செய்யுள் என்பதைத் தமிழறிஞர் மு. அருணாசலம் (12-ஆம் நூற். இலக்கிய வரலாறு) தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தச் செய்யுள் கூறும் செய்திகள் பொய்யானவை என்பதைப் பின்வரும் சான்றுகளால் உணரலாம்:

1. தொல்காப்பியம் இளம்பூரணர் உரையைத் தேடிப் பதிப்பித்தவர் எவருக்கும் இந்தச் செய்யுள் கிடைக்கவில்லை. வேறு ஏட்டுச் சுவடிகளிலும் இது இடம் பெறவில்லை.

2. திருக்குறள் உரையாசிரியர்களைக் கூறும் பழைய வெண்பா இளம்பூரணரைக் குறிப்பிடவில்லை.

3. பெருங்கதையைப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா. அதற்குக் குறிப்புரை இருந்தமை பற்றிக் குறிப்பிடவில்லை.

இந்தப் போலிச் செய்யுள், ஆராய்ச்சி அறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தாரையும் மயக்கி விட்டது. அவர் இளம்பூரணரை மணக்குடவர் என்று முடிவு செய்ய முயன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (இலக்கிய ஆராய்ச்சிகளும் கல்வெட்டுகளும் (1961) பக். 58-61).

போலிப் புலவரின் பொய்ம்மை எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது!

[*] இவர் இன்னிலை என்று பெயரால் ஒரு போலி நூலையும் செங்கோன்
தரைச்செவு என்ற பொய்ந்நூலையும் இயற்றி ஆராய்ச்சி உலகில் குழப்பம்
உண்டாக்கியவர்.

0 comments: