ராஜா சர் அண்ணாமலை வள்ளலார் வாழ்த்து ~ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடியது


பாரதிதாசன் பாடற்றொகுப்புகளில் காணப்பெறாத அகவலும், விருத்தங்களும் தருகிறேன். 1941-ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அண்ணாமலை அரசர் மீதியற்றியவை. படித்து மகிழ்க.

நா. கணேசன்

Rare poems by Kavignar Bharatidasan. In akaval and viruttam meters, sung on Rajah Sir Annamalai Chettiar, 1941. Published in: Rajah Sir Annamalai Chettiar commemoration volume [presented on his sixty first birthday  by the members of the university.] Edited by Bijayeti Venkata Narayanaswami Naidu. Annamalai University, 1941.
-----------------------------------------------------------------------


ராஜா சர் அண்ணாமலை வள்ளலார் வாழ்த்து
பாரதிதாசன்

அகவல்

மலர்தலை யுலகிற்கு வான்பெரு நாடு
பலர்புகழ் ஞாயிறு படைத்தது போன்று
பண்ஆர் தமிழ்நாடு பகர் ராஜாசர்
அண்ணா மலைச்செட் டியாரை இந்தத்
தமிழர் இழைத்த தவத்தின் பயனாய்
அமிழ்தம் போல அளித்த தன்றோ!

அருளினால் அக்கதிர் அம்புலி தன்னை
இருளினால் படாமை இழைத்தது போல
நல்கலை நயந்த அண்ணா மலையார்
பல்கலை மதிக்கு - ஒளி பாய்ச்சி அருளினார்
விண்ணுக்கு அத்திங்கள் விளக்காவது போல்
மண்ணுக்கு அக்கழகம் மணி விளக்கன்றோ!

நிலவு பொழிந்து நிலவு பொழிந்து
குலவும் அத்திங்கள் குளிர்செய்வது போல்
நண்ணாப் பெரும்பேறு நண்ணு ராஜாசர்
அண்ணா மலைக்கலைக் கழகமோ வெனில்
அறம் பொருள் இன்பம் ஆம்வீ ட்டறிவின்
திறம் பொழிந்து திறம் பொழிந்து
மடமையாம் வெப்பினை வறுமையாம் பிணியினை
நடமின் என்று நடத்தித் தீர்த்துக்
குளிரினைப் பெரிதும் கொழிக்கின் றதுவே!

பன்னரும் புகழினைப் பாரெலாம் செலுத்திய
மன்னரும் அறிஞரும் வாழ்ந்தஇத் தமிழ்நாடு
இனிப்புறுங் கரும்பின் நுனிப்புறம் சுவைதேய்ந்து
போதல் போலப் புனிதம் தேய்ந்தும்
சாதல் போலத் தளிர்ச்சி எய்தியும்
குழிவுறும் கண்ணும் குனிவுறும் தோலுமாய்
அழிவுறக் கண்ட அண்ணாமலையார்
அருளும் அம்பலத் தருகில் மக்கட்குத்
தெருளும் அம்பலம் தேடி ’அண்ணாமலை
நகர்’ எனப் பேரிட்டு நாவலர் உள்ளமே
நிகர் எனப் பெரிதாய், நேயர்போல்  நல்லதாய்
பெருந்தமிழ் வேந்தர் பேழைபோல் கண்ணால்
அருந்தமிழதாக அமைந்த நிலையத்துப்
பாவிரி புலவர் பலரையும் கூட்டிக்
காவிரி பெருக்கெனக் கல்விப் பெருக்கைத்
தென்னாட்டுளந் தொறும் சேர்த்துத் தென்னாடு
பொன்னாடாகப் புரிந்த நன்றியால்
அண்ணாமலைப்பேர் அதனை நாடொறும்
எண்ணாத் தமிழர் எங்கணு மில்லை!
தெங்கிளங் காய்தொறும் தித்திக்கும் நீர்போல்
இங்குளார் உளந்தொறும் இனிக்கின்ற தப்பெயர்!

அனைவரும் அவ்வாறு - அப்பெரு வள்ளலை
நினைவ தோடு நிற்றலின்றி
உண்ணிலவும் அந்நினைப்பு – உவகையோடு புணர்ந்து
தண்ணிலவு புணர்ந்த வண்கடல் போலப்
பொங்கிட இங்கொரு புதுநாள் வந்தது
புதுநாள் என்எனில் புகல்வேன் கேளிர்:
நாள்ஒவ்வொன்றும் நன்மதி எதுவும்
வேள்இந்த நாட்டுக்கு விளைத்த அறங்கண்டு
வாழ்த்திச் சென்றன; வாளா கழிந்தில
ஆண்டு – ஒவ்வொன்றும் அண்ணாமலையார்
ஈண்டு மக்கட்டு – இழைத்த நன்மைக்கு
நன்றி கூறாது நடந்த தில்லை!
அண்ணாமலையார் அருங்கொடை வாழ்வில் 
எண்ணா வெறுநாள் எதுவும் இல்லை
அன்னார் கண்ட அவ்-அறநாட்கள் எனும்
மின்னார் பவள மெல்லிதழ்ப் பெண்கள்
பற்பலர் அரசரைப் பரவிப் போனபின்
அற்புதப் பெண்ணாம் அறுபதாம் ஆண்டு
மான்போல் வந்து மலர்போற் சிரித்துத்,
தேன்போல் பேசிச் சேல்போல் விழியால்,
மங்குல் போலும் வள்ளலாரின்
தொங்கல் மார்பைச் சுவைத்து நிற்க,
அவர்அவ் வறுபதாம் ஆண்டை அணைந்தனர்.

இருமுப்பான்-ஆண்டு எய்திய அண்ணலார்
வருநூற்றாண்டையும் மணக்கத் தக்க
குன்றத் தோளையும் குளிர்மலர் விழியையும்
அன்றலர் மலர்முகத் தழகையும் கண்ட
அவர்மனை-என்னரும் அன்னையாரோ வெனில்
புதுமணம் கண்டபோதுதம் காதலர்
மதுமணம் கண்ட மலர்க்கை நீட்டி
அங்கம் சிலிர்க்க அணிசெய் திட்ட
மங்கல நாணையும், மணாளர் தம்மையும்
கிள்ளை முதிரை கொள்ளுவதுபோல்
அள்ளி முத்தம் அளித்து மகிழ்ந்தார்.

அன்பொடு செட்டிநாட் டரசர் அரசியார்
மன்றினில் திருமுக மலர்ந்து வீற்றிருக்கப்,
பொதிகைத் தென்றல் புதுமணம் புரிந்தது!
வதிகைப் பரிதி மணிவிளக் கெடுத்தது!
முழங்கு தென்கடல் முரசம் ஆர்த்தது!

பழங்குடிமக்கள் இழந்தவை அனைத்தும்
இவை என்று கொணர ஈன்றதம் மக்கள்
அவையினில் இளவரசழகு செய்தனர்.
பாருக்குள் பற் பலகோடி மாந்தரின்
வேருக்கு வித்தாய் விளைந்த தொன்மைச்
செந்தமிழ் மக்கள் திசையடங்கலும்
தந்தமிழ் மொழியால் தாம்தாம் வாழ்த்திய
வாழ்த்தொலி அனைத்தும் மகரவீணைதான்
வீழ்த்திய அமுத வெள்ளமோ!  தாமரை
விரிந்த வாய்தொறும் விண்ணை நனைக்கச்  
சொரிந்த தேனூற்றுத் தொடர்போ! வேய்ங்குழல்
இசையின் பிழம்போ! இன்தமிழ்ப் பாட்டொடு
பிசைந்து கிடக்கும் பெரும்பயன் தானோ!
அதிர்த்த தென்கடல் அகடு பூரித்து
உதிர்த்த முத்தமோ! உலக மெல்லாம்
அகில்கமழ் குன்றின் அணித்து-உளார்கேட்கும்
முகில்கமழ் ஒசையோ! மொய்த்த தமிழர்க்கு
நண்ணாப் பேறு-என நண்ணு ராஜா சர்
அண்ணாமலையார், அரசியார், மக்கள்
வாழ்க பல்லாண்டு வாழ்க சுற்றம்
வாழ்க’ என்று வாழ்த்திய வாழ்த்தும்,
வெல்க அன்னார் விரிந்த கொள்கை
வெல்கஎன் றுரைத்த வெற்றி மொழியும்,
பல்குக செல்வம் பல்குக இன்பம்
பல்குக’ என்று பகர்ந்த மொழியும்
உண்மை ஞாயிறு நிலைபோல்
திண்மை உடையன ஆகுக சிறந்தே!


அமுதூட்டி அறிவூட்டும்கோயில்
பாரதிதாசன்

எண்சீர் விருத்தம்

இரவினிலே உணவருந்தி நாற்காலி யிற்சாய்ந்
 திருந்தேன்இத் தமிழ்நாட்டின் எளிமைதனை எண்ணி!
மரவேரிற் புழுப்போலே தீமைபல செய்து
 மாய்கின்றார் பொதுநலத்தில் நாட்டமில்லை மற்றப்
பரதேச மக்களையும் பார்க்கின்றோம் அங்குப்
 படிப்புக்கு வசதியுண்டு பிள்ளைகளைப் பெறுவார்.
குரலுடையார் இங்கெல்லாம் வெறுங்கூச்சலிடுவார்
  பெருஞ்செல்வர் இருக்கின்றார் கொடைக்குணந்தானில்லை. (1)

என்றுநான் பலவாறு நினைத்திருக்கும் நேரம்
 என்மனைவி வெற்றிலையும் கையுமாய் வந்தே
என்னயோ சனைஎன்றாள் என்னேடி மாதே
 இராக்காலம் தருவதோர் இன்பத்தை இந்த
சின்னநிலைத் தமிழ்மக்கள் அடைவதில்லை அறிவின்
  திறமற்ற மக்களுக்குக் காதல்ஒரு கேடா
அன்புள்ள பிள்ளைகட்கோ அருங்கல்வி வசதி
  அணுவளவும் இல்லையன்றோ என்றுநான் சொன்னேன். (2)

தன்னலமே அறியாதார் வாழ்ந்திருந்த இந்தத்
  தமிழ்நாட்டின் வீழ்ச்சியினை நிலையெனவே எண்ணி
இன்னலுற்றீர் சரியன்று முன்னாளில் உழவர்
  இட்டவிதை ஒன்றிருக்க முளைப்பதுவே றாமா
கன்னல்நறுஞ் சாற்றைப்போல் இந்தஇராப் போதில்
  கலைநுணுக்கம் பேசுகின்றார் மாணவர்கள் கேளீர்
அன்னதுதான் ராஜாசர் அண்ணாமலைப்பல்
  கலைக்கழகம் அமுதூட்டி அறிவூட்டும்கோயில்.   (3)

திருக்கோயில் பலகண்டும் சத்திரங்கள் கண்டும்
  தென்னாட்டில் வாழ்கின்ற அருமைத் தாய்மார்கள்
கருக்கோயில் விட்டுவந்த முருகப் பிள்ளைகள்
  கலைக்கோலம் பெறப்பலவாம் நிலைக்கழகம் கண்டும்
இருக்கும்அவர் பிறசெல்வர் ஈந்துவக்கும் வழியை
  இன்னதென்றும் காட்டிவிட்டார் இன்னமென்ன தேவை!
உருக்காதீர் நெஞ்சத்தை என்றுரைத்தாள் மனைவி.
   ஓகோகோ ஓகோகோ அப்படியா செய்தி   (4)

ஓரிரவில் ஒருதுளியும் இனிமேல் வீணாக்கும்
   உத்தேசம் எனக்கில்லை வித்தார மயிலே
பாராள ஒரு பிள்ளை, படை நடத்தப் பசங்கள்,
  பைந்தமிழ்க்குத் தொண்டுசெய்ய நல்லநல்ல மக்கள்
ஏராளமாய் வேண்டும். தவம்புரிவோம். கல்வி
  ஈயத்தான் அண்ணாமலைக்கழகம் உண்டே
பாராயோ என்றுரைத்தேன் காத்திருந்த பாவை
  பறந்துவந்தாள் ஆனந்த வெள்ளத்திற் பாய்ந்தோம்.  (5)

0 comments: