'குறளரசி’ சீதா சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் தமிழ்விழாவில் சிறப்பு விருந்தினர்

சீதா பாலாஜி அண்மையில் டல்லஸ் மாநகரில் திருக்குறள் முழுதும் குறைந்த மணித்துளிகளில் ஒப்பித்து சாதனை நிகழ்த்தினார். இன்று சான் பிரான்சிஸ்கோ மாநகரில் தமிழ்விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுள்ளார். வளைகுடா தமிழ் மக்கள் கலந்து வாழ்த்த வேண்டுகிறோம்.

செட்டிநாட்டு தனவணிகர்களில் பல தலைமுறைகளாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், ... நகரங்களிலே வாழும் குடும்பங்கள் பல. தமிழுக்கும், சைவத்துக்கும் ஆன அனைத்து முயற்சிகளுக்கும் துணைகொடுப்போர். அவ்வகையில் எங்கள் 100-150 ஆண்டுகால குடும்பநண்பர்கள் பாலாஜி பெற்றோர், தாத்தா - பாட்டி. நான் பொள்ளாச்சி போகும் போது செட்டிநாட்டுப் பலகாரங்கள் கொணர்ந்து அன்புடன் அளித்து மகிழும் ஆச்சி இன்றில்லை. ஆனால், பேர்த்தி அமெரிக்காவில் குறளரசி ஆகியுள்ளார்.

ஆச்சியின் தந்தையார்தான் பொள்ளாச்சி முனிசிபாலிட்டி ஆனபோது முதல் சேர்மன். அதற்கு அடுத்ததாக ப. நாச்சிமுத்துக்கவுண்டர் பல ஆண்டுகள் அப்பதவியில் பொள்ளாச்சியைச் செழுமைமிக்க நகரம் ஆக்க உழைத்தார்.
http://nganesan.blogspot.com/2017/02/pollachi-pa-nachimuthu-gounder.html

 நா. கணேசன்

பின்னிணைப்பு: வள்ளுவர் முதற்றே உலகு, கவிஞர் வைரமுத்து கட்டுரை.







வள்ளுவர் முதற்றே அறிவு
By கவிஞர் வைரமுத்து  |  Dinamani,  20th February 2017

திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் தள்ளித் தாழிட்டுக் கொள்வதே தக்கதென்று தோன்றுகிறது. ஞானத்தகப்பன் திருவள்ளுவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்போ - வியப்போ - களிப்போ - காதலோ இக்கட்டுரையின் வாக்கியங்களுக்கிடையே வழிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருக்கிறேன். ராகங்களுக்குத் தேவையான மூச்சைமட்டும் புல்லாங்குழலுக்குள் பொசிவதுபோல, மொழியின் சத்தியம் அனுமதிக்கும் உணர்ச்சிகளைக் கொட்டி மட்டும், இக்கட்டுரையைக் கட்டியமைக்கிறேன்.

மனித நாகரிகத்தில் நிலைத்து நிற்கும் பத்துநூல்களுள் திருக்குறளும் ஒன்று என்று சொல்வதற்கு நான் தமிழன் என்பது ஒரு தடையாக இருக்காது. ஆனால், ஏனைய மெய்ந்நூல்களும் அறநூல்களும் காலங்கடந்து கரையேறி வந்ததற்கும் ஈராயிரம் ஆண்டுகளை எதிர்நீச்சலிட்டு திருக்குறள் இன்னும் உயர்தனிச்சிறப்போடு ஓங்கி நிற்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

உலகத்தின் மெய்ந்நூல்கள் பலவற்றை அரசு மதம் என்ற தங்கத் தூண்கள் தாங்கிப் பிடித்தன. கிரேக்க ரோமானிய மெய்ந்நூல்களை உள்வாங்கித்தான் ஐரோப்பியச் சட்டங்களும் அமெரிக்கச் சட்டங்களும் இயற்றப்பட்டன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் சாரம்தான் யூதர்களின் சட்டம். கன்பூசியசின் சமயவெளிச் சிந்தனைகளைத்தான் சீனாவின் ஹான் அரசமரபு அரச சமயமாக்கி அழகுபார்த்தது. திருக்குர்ரானில் சொல்லப்பட்ட பல திருவசனங்களை இஸ்லாம் சட்டவடிவாக்கி வாழ்வியலாக்க வழிசெய்தது. பௌத்தத்தின் சில கூறுகளை அசோகர் அரசு அரசாணை செய்தது. அர்த்தசாஸ்திரம் - மனுஸ்மிருதி இரண்டின் அடிப்படைகளையும் இந்துஸ்தானம் தன் ஆதிநாள் சட்டமாக அமைத்துக்கொண்டது.

இப்படி எல்லா மெய்ந்நூல்களையும் அரசர்களும் அரசுகளும் ஆதரிக்க திருக்குறள் என்ற ஞானப்பனுவல் மட்டும் தங்குவதற்குத் தளமில்லாமலும் தாங்குவதற்குத் தோள்களில்லாமலும் வளிமண்டலத்தில் அலையும் ஒரு பனையோலையாய் காலமெல்லாம் மிதந்து திரிந்தது. திருக்குறள் ஓர் அநாதை அறிவு. தமிழர்களால் தள்ளி வைக்கப்பட்ட தங்கம். பல அரசர்கள் காணாமற் தொலைத்த கருவூலம். வேள்விப்புகை கண்மூடியதால் காணப்படாத ஞானத்திருவோலை.

திருக்குறளைத் தூக்கிச் சுமக்க மதங்களின் பீடங்கள் இல்லை - அரசுகளின் பல்லக்குகள் இல்லை - திருக்குறள் பேசப்பட்ட நிலப்பரப்புக்கே தமிழ்நாடு என்ற பேரில்லை - வாள்முனையில் நீட்டிக்கப்பட்ட நெடுந்தேசம் இல்லை - திருக்குறள் எழுதப்பட்ட இனம் உலக மக்கட்பரப்பில் பேரினத் தொகுதியில்லை. சத்தியத்தின் சார்பை மட்டுமே நம்பி ஒருநூல், உலக அறிவின் உயரத்தில் ஓர் ஆதி இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறதென்றால் அது எங்கள் முப்பால் ஆசான் வள்ளுவரின் மூளைச் சாறாய் விளங்கும் திருக்குறள் மட்டும்தான்.

இது எதையும் சார்ந்த நூலும் இல்லை; ஏதோ ஒரு மொழியின் சார்பு நூலும் இல்லை. பரிமேலழகர் - நச்சினார்க்கினியர் - அழகிய மணவாள முனிகள் போன்ற இடைக்காலத்து உரையாசிரியர்களும் சில மதாசாரியார்களும் வடமொழியின் நிழல்தான் திருக்குறள் என்று நிறுவப் போந்தனர். தத்தம் அறிவாற்றலுக்கும் வடமொழியே மூலம் என்று சொல்வதன் மூலம் தம் கல்வித் தகுதியை, புலமைப் புடைப்பை நிறுவிக்கொள்ள முயன்றனர். ஆனால் திருக்குறள் வடமொழியின் வழிநூல் அன்று.

"தர்மார்த்த காம மோட்சம்' - அதாவது - அறம் பொருள் இன்பம் வீடு - என்பதே வடமொழி நிரல் நிரை. ஆனால் அறம் - பொருள் - இன்பம் என்பதே தமிழர்தம் வழிமுறை. வீடு என்பது தமிழர் மரபாக எஞ்ஞான்றும் கொள்ளப்படவில்லை. அறம் பொருள் இன்பம் கண்ணுக்குத் தெரிந்த மண்ணியல். ஆனால் வீடு என்பது கண்ணுக்குத் தோன்றாத விண்ணியல். இன்பமும் துன்பமும், அகமும் புறமும், பிறப்பும் இறப்பும் மண்ணியல் காணும் மனிதர்க்கே உரியன. வீடு என்பது கண்ணுக்குச் சிக்காத கைக்கெட்டாத ஒரு கருத்தாக்கம். அதனால்தான் திருவள்ளுவர் வீடு என்ற இல்லாத வழி ஏகாமல் இன்பம் என்ற இயலும் வழியோடு நிறுத்திக்கொண்டார்.
"அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே' என்ற நன்னூலைப் பிற்காலத்துக் கடைச்செருகல் என்று கருதலாம்.

ஆனால் -
"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை'
- (தொல்காப்பியம் : 1038)
- என்று தொல்காப்பியனார் முன்னெடுத்தோடும் முப்பொருள்தான் தமிழர் வழக்கு. அதுதான் அவர் வழிவந்த வள்ளுவர் இலக்கு. எனவே முப்பொருளென்பது தமிழர்களின் தனி மரபென்றே பெறப்படும்.

ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் - ஒரு கொலைகாரன் - ஒரு விலைமகள் என்ற நான்கினம் கழிந்த ஒரு சமூகம்தான் மனித
குலம் நீண்டநாள் கண்டுவரும் நெடுங்கனவு. அந்த மாசற்ற உலகை ஒரு தனிமனிதராக உலகுக்கு ஓதிக்காட்டியவர் திருவள்ளுவர்.

சுட்டுக்காய்ச்சும் பொன்னிலிருந்து மாசுகள் உருகிக்கழன்று ஒழுகி ஓடுதல்போல வள்ளுவரின் பேரறிவு என்ற பெருஞ்சுடரில் வாழ்வின் மாசுகள் எரிந்து கழிகின்றன. அது இலட்சியவாதம் (Ideology) என்றுகூடக் கழிபேரறிவாளிகளால் கழிக்கப்படலாம். ஆனால் இன்று எட்டப்பட்டிருக்கும் எல்லா உயரங்களும் இலட்சியவாதத்தின் கைக்குழந்தைகள்தாம். கடவுள் என்ற கற்பனாவாதத்தையே ஆழ்ந்து ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆழிசூழ் உலகு, திருவள்ளுவர் மீது மட்டும் தீண்டாமையை அனுசரிக்க முடியாது.

திருவள்ளுவரை உலகப்புகழ் பெற்ற நூல்களோடு ஒப்பீடு செய்ய விழைகிறேன்.
இன்னோர் அறிவைக் குறைப்பதோ திருவள்ளுவரை உயர்த்துவதோ என் நோக்கமன்று. கால மதிப்பீடுகளில் வள்ளுவரின் கனிவும் கருணையும் மனித நாகரிகத்தின் மாண்பு கூட்டுவதைக் காட்டுவது மட்டுமே என் முயற்சியாகும்.

"அர்த்தசாஸ்திரம்' என்பது கௌடில்யர் படைத்த சமூகப் பொருளாதார அரசநீதி. நால்வருணத்திற்கேற்ற நடைமுறை வகுப்பதும், இருந்த சமுதாயத்தை இருந்தபடி காப்பதும், குற்றங்களையும் தண்டனைகளையும் வருணபேதம் பார்த்து வகைப்படுத்துவதும் அர்த்தசாஸ்திரத்தின் அடிப்படையாகும். அரசூழியர்க்கான ஊதியத்தை வகுத்துக்கொடுக்கும் அதே அர்த்தசாஸ்திரம், விலைமகளிர்க்கான ஊதியத்தையும் விதித்துக் காட்டுகிறது. தாசிகளுக்கு ஊதியம் நிர்ணயிக்க வந்த கௌடில்யர் முதல்நிலை தாசிக்கு ஆண்டொன்றுக்கு மூவாயிரம் பணமென்றும், இரண்டாம் நிலை தாசிக்கு ஈராயிரம் என்றும், மூன்றாம் நிலை தாசிக்கு ஆயிரம் என்றும் கருணையோடு படியளக்கிறார். (தாசிகளின் தரநிலைகளை அளந்துகாட்டும் அளவுகோல்கள் யாவையென அர்த்தசாஸ்திரத்தில் ஆராய்ந்து தேடினேன்; கண்டடையும் பேறு பெற்றிலேன்)
ஆனால் திருவள்ளுவரோ பரத்தைமையிலிருந்து பெண்ணினத்தை மீட்டெடுக்கவே எழுத்தாணி ஏந்துகிறார். "வரைவின் மகளிர்' என்ற அதிகாரத்தில் பரத்தைமை என்ற உலகத்தின் பழைய சந்தையை மொத்தத்தில் மூடிவிடுகிறார். விலைப் பெண்ணோடு ஒருவன் முயங்க நினைப்பது அறியாத பிணம் ஒன்றை இருட்டில் தழுவுவது போன்றது என்று கடுங்கற்பனை செய்கிறார்.
"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று' - என்று இழிவு செய்து கழிவு செய்கிறார்.

பொருளுக்காக ஒரு பெண் தன்னையே விற்கும் சதைச்சந்தை உள்ளவரை நாகரிகச் சமுதாயத்தை எந்தக் காலத்திலும் எட்டவியலாது என்ற நுண்ணரசியல் இதில் நூலாடுகிறது. பாலுறவு என்பதையே அவர் வெறுத்தாரில்லை. பாலுறவுச் சந்தையைத்தான் அவர் வெறுக்கிறார்.
அதுமட்டுமன்று - பெண்டிரும் கள்ளுண்டு தள்ளுண்ட சமூகத்தில் கள்ளுண்டார் பிணத்திற்கு ஒப்பாவார் என்று எதிர்வினையாற்றிய முதல்மூளைக்காரர் திருவள்ளுவர்.
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் ; எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்' - என்று குறள் கூறுகிறது.
ஆட்சியாளர்களுக்கு ஒருசொல். ஒன்று மதுக்கடைகளை மூடிவிடுங்கள் அல்லது திருவள்ளுவர் சிலைகளுக்குத் திரைபோட்டு விடுங்கள்.
கார்ல் மார்க்சின் குரல் கேட்பதற்கு 1850 ஆண்டுகட்கு முன்பே பிச்சையெடுத்து உயிர் வாழும் நிலை ஏற்படின் உலகைப் படைத்தவன் அழிந்து போகட்டும் என்ற பொருளில்
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்' - என்று செங்குரல் எழுப்பிய சிங்கம் திருவள்ளுவர்.
இந்த வகையில் தமிழ்ப்பரப்பின் முதல் கலகக்காரர் திருவள்ளுவர் என்றே தெரிய வருகிறது.

வையத் தலைமைகொள்ளும் வலிமை கொண்டவன் மனிதன்தான். ஆனால் மனிதன்தான் இந்த பூமிக்குக் கடைசியாய் வந்து சேர்ந்த மற்றும் ஓர் உயிரி. இன்னொரு மனிதனால் கொல்லப்படுவதையோ, இன்னோர் உயிரால் கொல்லப்படுவதையோ எங்ஙனம் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டானோ அப்படியே இன்னோர் உயிரைக் கொல்லும் உரிமையையும் அதிகாரத்தையும் அவன் அடைந்துவிடக்கூடாது என்பதில் வள்ளுவர் உயிர் நேசத்தின் உச்சம் தொடுகிறார்.
உயிர்க்கொலை குறித்து மனுதர்மம் இரண்டு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறது. "பசுவை வீணாகக் கொல்பவன் அப்பசுவின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுக்குப் பசுவாகப் பிறவி எடுத்து மற்றவர்களால் கொல்லப்படுவான்' என்று உயிர்க்கொலையை ஒரு ஸ்மிருதி தடுக்கிறது. "புசிக்கத்தக்க பறவை விலங்குகளை வேள்விக்கோ தாய் தந்தையரின் நன்மைக்கோ ஒருவன் கொல்லலாம்' என்று இன்னொரு ஸ்மிருதி உயிர்க்கொலைக்கு அனுமதியும் தருகிறது.
ஆனால், வள்ளுவர் உயிர்க்கொலைக்கெதிராக எந்த நிலையிலும் வளைத்துப் பேசாமல் நிலைத்து நிற்கிறார். அது பௌத்தத்தின் பாற்பட்டதோ சமணத்தின் சார்புற்றதோ தெரியாது. அவிர்பாகங்களைக் கொட்டி ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட உண்பதற்கென்று ஓருயிரைக் கொல்லாதிருத்தல் உயர்ந்தது என்ற பொருளில் -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று'
- என்று உயிர்களின் கருணைமனுவை ஒற்றை வழக்கறிஞராய் உலக நீதிமன்றத்தில் முன்வைக்கிறார்.

உயிர்க்கு உறுகண் செய்யாமையே தவமென்றும், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவதே அந்தணம் என்றும் விரவிச் சொல்லிச் செல்லும் அறிவுச் செல்வர் உயிர்நேசமே மனித நாகரிகத்தின் உயர்அறம் என்று கல்வேர்களால் தாங்கப்படும் மலைபோல உறுதியாய் ஓங்கி நிற்கிறார்.
ஆளப்பிறந்தவர்கள் சாலச்சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென்பது வள்ளுவர் சொல்லும் அரசறம். "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது தமிழ் மரபு. யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகொண்டாலும் அரசன் முன்னெடுத்துச் செல்லவேண்டியது முதலில் அறத்தைத்தான் என்பதே தமிழரின் அரசநெறி.
"கடுஞ்சினத்த கொல்களிறும்
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகழ்மறவரும் என
நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' -
என்பது புறப்பாட்டு.

ஓர் ஆட்சி அறம் வழுவிப்போகும்போது ஆட்சியாளர்களைவிட்டு மக்கள் நழுவிப்போகிறார்கள் என்பதற்கு இறந்தகாலம் நிகழ்காலம் இரண்டுமே சாட்சியாய் நிற்கின்றன.
அரசியல் நீதி, இனத்துக்கு இனம் மாறுபடுகிறது. இத்தாலியச் சாணக்கியன் என்று அறியப்பட்ட மாக்கியவல்லி எழுதிய "தி பிரின்ஸ்' (இளவரசன்) என்ற அரசியல்நூல் ஓர் அரசன் தன் வெற்றிக்கு அறத்தை வளைத்துக் கொள்ளலாம் அல்லது அழித்துக்கொள்ளலாம் என்ற பொருளில் அரசனுக்கு அல்வழி காட்டுகிறது. 1513-இல் எழுதப்பட்ட இந்த நூலை இன்னும் கொண்டாடும் கூட்டம் இருக்கிறது. "ஓர் இளவரசன் மிருகத்தின் குணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் அது குள்ளநரியா சிங்கமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்பது மாக்கியவல்லி ஆக்கிய வாக்கியம்.
ஆனால், அரசனுக்கு வள்ளுவர் சொன்ன இலக்கணமே வேறு.
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்' - என்று இலக்கணம் எழுதுகிறார்.

உயரறிவு கொண்ட வாசகர்களே! சற்றே உற்றுப் பாருங்கள். அதிகார மையத்தின் உயரத்திலிருக்கும் அரசனை விலங்கு நிலைக்குக் கீழிறக்குகிறார் மாக்கியவல்லி. ஆனால் அதே அரசனை மனித நிலையிலிருந்து இறை உயரத்துக்கு மேலேற்றுகிறார் வள்ளுவப் பேராசான். இப்படி ஒப்பிட்டுச் சொல்ல நமக்கு உலக அறிவு இருக்கிறது; ஆனால் உரக்கச் சொல்ல உலக அரங்குதான் இல்லை.

மாறும் உண்மைகளென்றும், மாறா உண்மைகளென்றும் இவ்வுலகில் இரண்டுண்டு. பருவகாலங்கள் என்பவை மாறும் உண்மைகள். பிறப்பு - இறப்பு என்பவை மாறா உண்மைகள். இவ்விரண்டிற்கும் மத்தியில் "மாறிக்கொண்டேயிருக்கும் மாறா உண்மைகள்' என்று ஒன்றுண்டு. அப்படிப்பட்ட உண்மைகளுள் ஒன்று ஒழுக்கம். எல்லாக் காலங்களிலும் ஒழுக்கம் என்ற விழுமியம் இருக்கவே இருக்கும். ஆனால் அது காலந்தோறும் இனம்தோறும் இடந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும்.
உடன்பிறந்த அண்ணன் - தங்கை பாலுறவு என்பது உலகெங்குமே ஒப்புக்கொள்ளப்படாத ஒழுக்கம். ஆனால் அரசுரிமை கைவிட்டுப் போய்விடாதிருக்க, அது ஒரு குடும்பத்து உரிமையாகவே விளங்க அண்ணனும் தங்கையும் அல்லது தமக்கையும் தம்பியும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது ஒருகாலத்தில் எகிப்திய ராஜகுடும்பத்தின் அரச ஒழுக்கம். திருமணத்திற்கு முன் மணமகனும் மணமகளும்
கலவிகொள்ளக்கூடாது என்பது ஒரு பொது ஒழுக்கம். ஆனால் திருமணமாகாத ஓர் ஆணும் பெண்ணும் உள்காட்டுக்குள் ஓடிப்போய் ஓரிரு நாட்கள் உடனுறைந்து ஊருக்குள் திரும்பிவந்து, பிடித்தால் மணம் புரிவதோ பிடிக்காவிட்டால் அவரவர் வீடு திரும்புவதோ ஒருசில பழங்குடிகளின் மண ஒழுக்கம்.
இல்லறம் என்ற மனித ஒழுக்கம், சேர்ந்து வாழ்தல் என்ற நிலையில் திரிந்து சேர்ந்து
உறைதல் என்ற நிலையைக் கடந்து சேர்ந்து சேர்ந்து பிரிந்து போதல் என்று வடிவம் பெறுவதாகவும் அறியமுடிகிறது. அதனால் அறத்தையும் ஒழுக்கத்தையும் இன்னவையென வரையறுத்துச் சொல்லவே
இயலாது.

அறத்திற்கு விளக்கம் தரவந்த உரையாசிரியர் பரிமேலழகரோ, "அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், விலக்கு, தண்டம் என்று மூவகைப்படும்' என்று எழுதுகிறார். பரிமேலழகர் உரையும் பொய்யாயிற்று. ஒழுக்கம் குறித்த அவரது கருத்தும் திரிந்து போயிற்று. ஆனால் மூலநூலில் ஒழுக்கம் குறித்து எழுதினாரே வள்ளுவர் அவர் திரிந்தாரில்லை. அவர் சொன்ன ஒழுக்கம் வழக்கழியவுமில்லை. ஏனெனில் "ஒழுக்கம் எனப்படுவ தியாதெனின்' என்று அவர் யாதொரு குறளும் வகுத்தாரில்லை. "ஒழுக்கம் விழுப்பம் தரும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்' என்று பொது ஒழுக்கம் குறித்தே விரித்தாரேயன்றி இன்னதுதான் ஒழுக்கம் என்று கூறி இடர்ப்பட்டாரில்லை. காலத்தின் கடைசிநொடிவரை சிந்தித்த வள்ளுவரின் நீளறிவும் நூலறிவும் என் முன்னோனே மூத்த குடிமகனே என்று அழுது தொழுது ஆச்சரியப்பட வைக்
கிறது.

ஒரு நல்லிலக்கியம் வாழ்வுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். மனத்திட்பம் - வினைத்திட்பம் இரண்டுக்கும் உற்சாக ஊசிபோட வேண்டும். மனிதனின் நம்பிக்கையைக் குலைப்பதென்பது கல்லீரலில் ஆணி அடிப்பது போன்ற கடுஞ்செயலாகும். "கடலே வற்றப் போகிறது; குமிழியே நீ என் செய்வாய்?' என்று கேட்பது மனித வாழ்வை மண்ணுக்குள் புதைப்பதாகும். "பர்த்ருஹரி' என்ற
வடமொழிப் பெருங்கவிஞன்கூட அந்தப் புதைகுழியில் தன்பங்குக்குத் தானும் கொஞ்சம் மண் தள்ளியிருக்கிறான்.
"மனிதர் வயது நூறு
பாதி தூக்கத்தில் கழிகிறது
ஒரு காற்பகுதி இளமையிலும்
முதுமையிலும் ஒழிகிறது
மிச்சமுள்ள காற்பகுதியோ
பசியோடும் பிணியோடும் மூப்போடும்
முடிகிறது
கடல் அலைமேல் நுரைபோன்றது வாழ்வு
இதில் மனிதா - நீ
இன்புற்று வாழ்வது எங்ஙனம்'
- என்று கழிவிரக்கம் பாடும் கவிதை நம்பிக்கையின் சிறுசுடரை நசுக்குகிறது.

ஆனால் வள்ளுவனோ, "ஊழையும்
உப்பக்கம் காண்போம்' என்கிறான் "இடுக்கண் வருங்கால் நகுக' என்கிறான்.
"இன்பம் விழையான் இடும்பை
இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்' - என்று உள்ளத்தை ஊக்குகிறான்.
நிலையற்ற இவ்வுலகில் நிலைப்பது புகழ் மட்டும்தான். புகழுக்குரிய செயல்களை ஆற்றிப் போ மனிதா என்று ஆற்றுப்படுத்துகிறான்.
"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நின்பதொன் றில்'
- என்று அணையப்போகும் மனிதனை எழுப்பி அக்கினித் தூணாக்குகிறான்.

குறளின் நிலைத்த தன்மைக்கு இதுவும் ஒரு பெருங்காரணம்.
மழையில் நனைந்த மல்லிகையாய்க் குறள் என்றும் புதுத்தன்மையோடு துலங்கக் காரணம் அதன் பொதுத்தன்மை.
நட்புக்கு உவமை காட்ட வந்த நம்பெருமான் -
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - என்று எழுதியிருக்கிறார்.
இதில் உடுக்கை என்ற சொல்தான்
நுட்பமானது. வேட்டி - சேலை - துண்டு - துணி - துகில் - சட்டை - போர்வை - கச்சு -
கௌபீனம் என்று எந்த ஆடையைச் சொல்லியிருந்தாலும் அந்த ஆடை காலப்போக்கில் மாறி வழக்கிழந்திருக்கும். உடை என்ற நாகரிகம் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால் உடுத்தல் என்ற பண்பாடு மாறாது. எனவே மாறும் நாகரிகத்தை உவமை சொல்லாமல் மாறாத பண்பாட்டை உவமை சொன்னதன் மூலம் காலம் தன் சொற்களைத் தொடமுடியாத உயரத்தில் தூக்கி வைத்துவிடுகிறான் குறள் தந்த கோமான். சூரிய அடுப்பில் சுண்ட வைத்த பால்போன்ற சொல்லால் மட்டுமன்று வள்ளுவன் தன் உள்ளடக்கத்தாலும் உயர்ந்து நிற்கின்றான்.

இந்தப் பூவுலகில் அரசுகள் அழியலாம்; ஆட்சிகள் மாறலாம்; கோட்டைகள் இடியலாம்; கொத்தளம் சரியலாம்; பருவங்கள் தடம்மாறலாம்; புவியியல் இடம்
மாறலாம்; சில பறவை விலங்குகள் இனமழியலாம். ஆனால் மாறாதியங்குவது
மானுடத் தொடர்ச்சி மட்டும்தான். அந்த மனிதனின் மனம் - வினை இரண்டு மட்டும்தான் நிலையாத உலகில் நிலைத்த பொருள்கள். அந்த இருபெரும் பொருள்களையும் முயன்று செழுமைப்படுத்துவது - முடிந்த அளவு முழுமைப்படுத்துவது என்ற
மானுடப் பெரும்பணியில் தன் உயிரையே எரிபொருளாய் ஊற்றி ஒளியூட்டியிருக்
கிறார் வள்ளுவப் பெரும்புலவர். அதனால் மனிதன் இருக்கும் வரை மனம் இருக்கும்; மனம் இருக்கும் வரை குறள் இருக்கும்.
அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் அறிஞர் வள்ளுவராயிருந்தவர் காமத்துப்பாலில் கவிஞர் வள்ளுவராகிறார். காமத்துப்பாலின் ஒவ்வோர் அதிகாரமும் உடலின் மேற்பரப்பில் இயங்காமல் உள்ளத்தின் ஆழ்பரப்பில் இயங்குகின்றது.
காதல் மகரிஷி வாத்சாயனரின்
காமசூத்திரத்திலிருந்து வள்ளுவரின் காமத்துப்பால் அடிப்படையில் வேறுபடுகிறது.
கலவிகளின் பரிணாமங்களையும் உறுப்பு
களின் பரிமாணங்களையும் ஆண் பெண் உறவில் அங்கங்களின் பங்குகளையும்
விரித்துச் சொல்வது வாத்சாயன
ஒழுக்கம்.

ஆனால் வள்ளுவரோ உடல்களை வெறும் ஊடகங்களாக்கி உயிர் இன்பத்தின் உச்சத்திற்கு ஆணையும் பெண்ணையும் அழைத்துப் போகிறார். காமத்தின் செய்வினையோ செயப்பாட்டுவினையோ ஏதுமின்றி உயிரனுபவத்தை மட்டும் தன் பனையோலையை நாகரிகத்தில் நனைத்துக்கொண்டு எழுதுகிறார்.
"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்'
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்'
- என்று காமத்தைக்கூட தவத்தின் மொழியில் பேசுகிறார்.
இந்தத் திருக்குறள் என்ற பேரிலக்கியம் ஒன்றுதான் தமிழர்களின் முற்றிய நாகரிகத்துக்கு முண்டாசு கட்டுகிறது. கடல் விழுங்கிய லெமூரியாபோக மிச்ச நிலம்தான் தமிழ்நாடு. கடலும் காலமும் இந்த நிலத்தை விட்டுவைத்ததே வள்ளுவன் என்ற ஞானத் தலைவனின் வரவுக்காகத்தான். திருக்குறள் வாசிப்போடு நின்றுவிடக்கூடாது; வாழ்வியலாக வேண்டும். உரையாசிரியர்களின் ஊதியமாக மட்டுமே திருக்குறள் ஓய்ந்துவிடக்
கூடாது. உலகத்தை ஓதுவிக்க வேண்டும்.

தாய்ப்பால் நிறுத்தப்பட்ட வயதில் முப்பால் என்னும் தகப்பான்பால் குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் பயணித்த உலகநாடுகளின் உயர்ந்த மேடைகள் அனைத்திலும் திருக்குறளை உயர்த்திப் பிடித்திருக்கிறேன். திருக்குறள் என்
வாழ்வின் நிழலாகவே வந்துகொண்டிருக்கிறது.
எனக்கோர் ஆசை. சாவிலும் நான் திருக்குறளைச் சார்ந்திருக்க வேண்டும். என் வாழ்வின் நிறைவிற்குப் பிறகு என் தாய்மண்ணின் இரண்டாம் கருக்குழியில் நான்
கிடத்தப்படும்போது என் நெஞ்சில் திருக்
குறளை வைத்து, என் இரு கைகளையும் அதை அணைத்துக் கொள்ளுமாறு இணைத்துவிடுங்கள். இதுஎன்ன மூடநம்பிக்கை என்று சிலபேர் எள்ளலாம். இது 63 வயதில் நான் எழுதிய உயில் என்றும் கொள்ளலாம்.

2 comments:

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

வணக்கம் !


பிறந்ததோர் பிறப்பால் தேசப்
..பிணியற வைத்த வள்ளல்
கறந்ததோர் பாலைப் போலே
..காட்டிய குறளின் முப்பால்
மறந்ததோர் மனிதம் மீண்டும்
..மகிழ்ந்ததை ஏற்கும் வண்ணம்
சிறந்ததோர் பதிவை இங்கே
..செப்பினீர் வாழ்த்து கின்றேன் !

வாழ்க நலம்